சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு..!

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ அமைப்பே விசாரிக்கும் என்று தமிழக அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை பிறப்பித்திருந்தது.

2016ம் ஆண்டுதான் சிலைக் கடத்தல் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அன்று முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பழனியில் கோயிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக திருடப்பட்ட சிலை வழக்கில் விசாரணை நடக்கிறது.

ஆனால் தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் நேற்று சென்னை ஹைகோர்ட்டில், தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

மேலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் திருப்தியில்லை என்றும் அவர் தலைமையிலான குழு இதுவரை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் தமிழக அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. மேலும் நேர்மையான அதிகாரி பொன் மாணிக்கவேலிடம் இருந்து வழக்கை பறித்து சிபிஐ வசம் ஒப்படைப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

எனினும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Response