முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கமல் திடீர் பாராட்டு! காரணம் தெரியுமா..?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் போன்றோரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, முதுமை காரணமாக, தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்து வந்த அவர், சில தினங்கள் முன்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்சமயம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் பற்றி தெரிந்துகொள்ள ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், காவேரி மருத்துவமனையில் திரண்டுள்ளனர். நாளுக்கு நாள் கருணாநிதியின் உடல்நலம் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி வருவதால், அவரது உடல்நிலை குறித்து உண்மை தகவலை அறிய மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அவரை சந்தித்து, நலம் விசாரித்தனர்.இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. ஆனால் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து உண்மை அறிந்தேன். அவர் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அரசியல் வேறுபாடு பார்க்காமல், அதிமுக கட்சி தலைவர்களும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் போன்றவர்களும், நேரில் வந்து நலம் விசாரிப்பது பாராட்டத்தக்கது, அரசியல் மாண்பு கொண்டது என்று தெரிவித்தார்.

Leave a Response