‪சொத்துக்கு வரியா அல்லது மக்களின்‬ சொத்தைப் பறிக்க வரியா? மு.க.ஸ்டாலின் கேள்வி..!

ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக அரசு,சொத்து வரியை 50% முதல் 100% வரை கடுமையாக உயர்த்தியிருப்பதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 27ம்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,‪சொத்துக்கு வரியா அல்லது மக்களின்‬ சொத்தைப் பறிக்க வரியா? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1998இல் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50%விழுக்காட்டுக்கு மிகாமலும், வாடகைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100%க்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100%க்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரியை திடீரென உயர்த்தி எடப்பாடி பழனிசாமி அரசு மக்களைப் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளைப் பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது தமிழக அரசு” என்றும், “சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதை உடனடியாகத் திரும்ப பெறக் கோரியும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வரும் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response