மோடியை கட்டி அணைத்தது ஏன்? ராகுல் காந்தியின் விளக்கம்..!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டி அணைத்தது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள விளக்கம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி பேசிய போது அனல் பறந்தது. ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம், அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான ஊழல் புகார், நாடு முழுவதும் கும்பல் வன்முறையால் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது, தலித், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் போன்ற விவகாரங்களை எழுப்பி ராகுல் பேசிய பேச்சு பா.ஜ.க எம்.பிக்களை கடுமையாக கோபப்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் மிகுந்த ஆக்ரோசமாக பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாக திடீரென பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே சென்றார். ஏன் திடீரென ராகுல் மோடியை நோக்கி செல்கிறார் என்று பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட பதற்றம் அடைந்தனர். மிகுந்த ஆக்ரோசமாக பேசிய ராகுல், மோடிக்கு அருகில் செல்வதால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ? என்று கூட சில எம்.பிக்கள் அஞ்சினர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மோடியை கட்டி அணைத்து புன்னகைத்தார் ராகுல். சிறப்பாக பேசியதாக மோடி பாராட்டுவதற்காக ராகுலிடம் கைகுலுக்க மோடி கை நீட்டினார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ராகுல் மோடியை கட்டி அணைத்தார். பின்னர் ராகுலை அழைத்து கை குலுக்கி மோடி பாராட்டு தெரிவித்தார். மோடியை ராகுல் காந்தி கட்டி அணைத்தது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் எதற்காக மோடியை ராகுல் கட்டி அணைத்தார் என்று பலருக்கும் தெரியவில்லை.

இதற்கான காரணத்தை ராகுல் காந்தி, மோடியை கட்டி அணைப்பதற்கு செல்வதற்கு முன்னதாகவே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த பேச்சு அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. எதற்காக மோடியை கட்டி அணைத்தேன் என்பதற்கு ராகுல் அளித்த விளக்கம் பின்வருமாறு:- தனது அதிகாரம் கைவிட்டு போய்டு விடும் என்று மோடி அஞ்சுகிறார். இந்த அச்சம் அவரது கோபத்தின் மூலமாக வெளிப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் வெறுப்பை விதைக்க மோடி முயற்சிக்கிறார்.

மக்களை பிளவுபடுத்த வெறுப்பை பயன்படுத்த மோடி திட்டமிடுகிறார். ஆனால் காங்கிரஸ் மக்கள் மத்தியில் அன்பை பரப்ப விரும்புகிறது. மோடிக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். என்னை மோடி வெறுக்கலாம். ஏன் பப்பு என்று கூறி என்னை சிறுமைப்படுத்தலாம். என்னை அவமானப்படுத்தலாம். ஆனால் எனக்கு மோடி மீது எந்த வெறுப்பும் கிடையாது. நான் மோடி மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறன்.

இதோ பாருங்கள் நான் என் அன்பை வெளிப்படுத்துகிறேன். இப்படி கூறிவிட்டே மோடிக்கு அருகில் சென்றார் ராகுல். மேலும் கட்டி அணைத்துவிட்டு வந்து தான் மோடி மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்திவிட்டதாக கூறி பேச்சை முடித்தார் ராகுல்.

Leave a Response