சினிமாவுக்கு அடுத்த இடத்தில் தான் அரசியல் – கே.எஸ்.ரவிக்குமார்!

marum

டேனியல் பாலாஜி, பானுசந்தர், அனூப், பிரீத்தி தாஸ் நடித்து கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ள படம் ‘மறுமுகம்.’ த்ரில்லர் படமான இதை சஞ்சய் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், மணிவண்ணன் பேசுகையில், “திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் ஆர்ட் படம், வேகம் குறைவான படங்களைத் தான் கொடுப்பார்கள் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. ‘ஊமை விழிகள்’ படம் வந்தபின், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைத்தது.

இப்போதைய இளைஞர்கள் நிறைய சிந்தனையுடன் வருகிறார்கள். புதிதாக யோசிக்கிறார்கள். சினிமா வியாபாரம் விரிவடைந்திருக்கிறது. FMS, சேனல் ரைட்ஸ் என்று வருமான வழி கூடியிருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து படம் தயாரித்தால், லாபம் சம்பாதிக்கலாம். நஷ்டம் அடைந்தாலும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.  ‘காமெடி’ படங்கள் இப்போது ஒரு ‘டிரெண்ட்’ ஆக இருக்கிறது. அது, விரைவில் மாறிவிடும். காமெடி, ஒரு சுவை. அதுவே சினிமாவாகி விட முடியாது.

புதிதாக வரும் இளைஞர்களுடன் நானும் பணியாற்றுவேன். அதற்குள் சாக மாட்டேன். எனக்கு சினிமாவை விட்டால், வேறு தொழில் தெரியாது. என்னை துரத்தி அடித்தால் கூட மறுபடியும் சினிமாவுக்குள்ளேயே வருவேன்” என்றார்.

விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், ‘‘சினிமா அழிந்து விடும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். ஆனால் அது என்றைக்குமே அழியாது. அழியும் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். இளைஞர்கள் தைரியமாக சினிமாவுக்கு வரலாம். வெற்றி பெறலாம். சினிமா போன்று ஈர்ப்பான துறை வேறு இல்லை. அரசியல் அதற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறது,” என்றார்.