சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம் சேலத்தில் கருத்து கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதன்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் ஒட்டவைக்கப்பட்டிருக்கும் பழனிசாமி அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளையே பறிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சேலம் – படப்பை 8 வழிச் சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி சேலம் காமலாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாம் தாமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்காக போட்ட வழக்கில், நிபந்தனை பிணையில், கடந்த ஒரு வாரமாக ஓமலூரில் தங்கி அங்கு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜூலை 18 ஆம்ட் தேதி பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கூமாங்காடு கிராமத்தில் 8 வழிச் சாலையால் வாழ்வுரிமை இழக்கும் விவசாயிகளை சந்தித்துப் பேசினார் சீமான். அப்போது காவல்துறையினர் வந்து சீமானையும் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி பெற்றே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் 30/2 என்ற ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி இந்தக் கைது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சீமான் அங்கு பொதுக்கூட்டம் நடத்தவில்லை; 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 144 தடைச் சட்டம் போன்ற எதுவும் பிறப்பிக்கப்படாதபோது ஏன் இந்தக் கைது? என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், சீமான் கைது செய்யப்பட்டது அப்பட்டமான சட்டமீறல் நடவடிக்கை எனக் குற்றம்சாட்டுவதுடன் இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டித்துள்ளது.
சீமான் கைது செய்யப்பட்ட செய்திகளை முந்தித் தருவதாக ஏய்த்து வருபவர்கள் உள்பட ஊடகங்களை மக்களுக்குத் தெரிவிக்கவிடவில்லை என்கிற அளவுக்கு ஆட்சி இங்கு நடக்கிறது, என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இது அரசுக்கு நல்லதல்ல என்றும் நாம் தமிழர் சீமான் உள்பட சேலம் – படப்பை 8 வழிச் சாலை தொடர்பாக கைது செய்த அனைவரையுமே உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளையும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.