தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். மேலும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகல் வைகோவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக் கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது.
அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும், 23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.