தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறது-பொன்.ராதாகிருஷ்ணன்..!

தமிழகத்தில் பல அமைப்புகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர்கள் ஊடகங்களுக்குக்கூட பெரிய சவாலாக வருவார்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், மத பயங்கரவாதிகள், தமிழ் பெயரைச் சொல்லி பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு பயங்கரவாதிகள் பல்வேறு அமைப்புகளுக்குள்ளாகவும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் ஊடகங்களிலும் ஊடுருவி இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, தமிழக அரசு விரைந்து செயல்படவில்லை என்றால் தமிழக மக்கள் பெரிய அழிவினை சந்திக்க ஆளாக நேரிடும்.

பயங்கரவாதிகளை ஒடுக்க அரசாங்கம் சர்வ அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுடன் தமிழக அரசு நீக்கு போக்காகவும் ஒரு சமாதான உடன்படிக்கையுடன் போனதால்தான் தமிழகம் இந்த மாதிரி மோசமான சூழ்நிலையை சந்தித்திருக்கிறது.

நான் ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன் தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் இதை சாதாரணமாக விட்டால் அது எம்.ஜி.ஆருக்கு செய்யக்கூடிய துரோகம். எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் தெளிவான நடவடிக்கை நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை. வால்டர் தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார். ஆகையால், தமிழக அரசு பயங்கரவாதிகளை ஒடுக்க போலீசுக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டாமா?

பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கம் தேவையில்லை. 7 கோடி தமிழர்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாக மட்டும்தான் தமிழக அரசாங்கம் இருக்க வேண்டும்.”

இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Response