பொறுப்பேற்று 16 மாதங்கள் வரை செய்து காட்டாததையா இதற்கு மேல அவர் செய்யப் போகிறார்? ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி..!

நாங்கள் பொறுப்பேற்று 16 மாதங்கள் வரை செய்து காட்டாததையா இதற்கு மேல் அவர் செய்து காட்டப் போகிறார்?” எனமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது. காவிரி நீருக்காகப் போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்றுத் தந்தது அதிமுகதான். காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து, பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுகதான். போட்ட வழக்கை சுயநலத்துக்காக திமுக திரும்பப்பெற்றது” என்று குற்றம்சாட்டினார்.

“காவிரி நடுவர் மன்றம் அமையக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா” என்று குறிப்பிட்ட எடப்பாடியார், திமுகவின் அலட்சியத்தால் 2007இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கர்நாடக, கேரள மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன என்றும் விமர்சித்துள்ளார்.

யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால்தான் அணையைத் திறக்க முடியும் எனதெரிவித்த முதல்வர், “ஆறு மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கூறினார், ஒரு வருடம் முடித்துவிட்டோம். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது. ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக அரசை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

மேலும் பேசிய எடப்பாடியார்,நேற்று ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ‘கருணாநிதி இருந்திருந்தால் ஆட்சியைக் கலைத்திருப்பார் என்று மக்கள் கூறுகிறார்கள். அதை நான் செய்து காட்டுவேன்’ என்று கூறியுள்ளார். நாங்கள் பொறுப்பேற்று 16 மாதங்கள் வரை செய்து காட்டாததையா இதற்கு மேல் அவர் செய்து காட்டப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Response