பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரிய மனுவை, குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள் என அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளை கடந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், 27 ஆண்டுகளைக் கடந்து போராடி வருகிறேன். என் மகன் கொலைகாரன் அல்ல. அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ மாறிமாறிப் பேசியது. தற்போது 27 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தண்டனையை அனுபவித்துவிட்டான்.

குடியரசுத் தலைவர் இந்த வழக்கில் இப்போது வருவது ஏன்? குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் என அனைத்துமே பாஜக அரசுதானா என நினைக்கத் தோன்றுகிறது. ஏன் இந்த விளையாட்டு? அவர்களின் அரசியலுக்கு நானும் எனது மகனும் பயன்பட்டது போதும். எங்களைக் கொன்றுவிட்டால்? உண்மையில், எங்களுக்கு வாழ விருப்பமில்லை. அடுத்து நான் மனு அளித்தால், எனது மகனைக் கொன்றுவிடுங்கள் என்றுதான் மனு அளிப்பேன் என கண்ணீர் மல்க வேதனையோடு தெரிவித்தார்.

Leave a Response