தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் எனது இரண்டு கண்கள்-தினகரன் நெகிழ்ச்சி..!

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் எனவும் நீதிபதி சுந்தர் தகுதிநீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். அதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளனர். அவர்கள் அதிமுகவை காப்பாற்றுவதற்காக பதவியை தியாகம் செய்தவர்கள். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்திருந்தால் அவர்கள் பல விஷயங்களை சாதித்து கொண்டிருந்திருக்கலாம். அவர்களுக்கும் பயனும் இருந்திருக்கும். ஆனால் பதவியை தூக்கி எறிந்துவிட்டு கட்சியை காப்பாற்றுவதற்காக, தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று எங்களுடன் இருக்கிறார்கள்.

தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் அமமுக, தொடக்க விழாவின் போது வர முடியாத சூழல் இருந்தது. அதை பெரிதுபடுத்தக்கூடாது. அவர்கள் இருவரும் என் இரண்டு கண்கள். 18 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். அதில் எந்தவித சந்தேகத்திற்கும் கேள்விக்கும் இடமில்லை என தினகரன் தெரிவித்தார்.

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் 18 பேரும் எங்களுடன் தான் இருப்பார்கள். புதுச்சேரி சபாநாயகர் உத்தரவில் தலையிடும் நீதிமன்றம், தமிழகத்தில் முடியாது என்கிறது. புதுச்சேரிக்கு ஒரு உத்தரவு, தமிழகத்திற்கு ஒரு உத்தரவா? என கேள்வி எழுப்பினார்.

மக்கள் விரும்பாத இந்த ஆட்சியின் ஆயுட்காலம், மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இந்த ஆட்சி நீட்டிக்கப்பட்டிருக்கிறது என தினகரன் தெரிவித்தார்.

Leave a Response