பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் கோரிக்கை விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்து செய்ய கோரியது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கோவையில் நடத்திய வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கார்த்திகை செல்வன், கோவை செய்தியாளர் சுரேஷ்குமார், எம்.எல்.ஏ. தனியரசு மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை டிவி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கு பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று
கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியாது. புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கைரத்து செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்தவழக்கு தேவைதானா? என்றார். இதேபோல், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுததினர்.

எப்.ஐ.ஆரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் கோரிக்கை விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் என்று கூறினார்.

Leave a Response