பெங்களூரில் காலா திரைப்படத்திற்காக சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு..!

பெங்களூரின் சில திரையரங்குகளில் மட்டும் காலா திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காவிரி குறித்து ரஜினிகாந்த் கூறியிருந்த கருத்தை எதிர்த்து இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து, பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதிலும் காலை ஷோ ரத்தானது. இருப்பினும் மதியம் 2 மணிக்கு மேல் ஐனாக்ஸ் மல்டிபிளக்சுகளில் படம் வெளியிடப்பட்டது.

இதேபோல படிப்படியாக சீனிவாஸ், பாலாஜி உள்ளிட்ட மேலும் பல தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் வினியோகஸ்தர் சீனிவாஸ் கூறுகையில், சுமார் 50 திரையரங்கங்களில் காலா திரையிடப்பட்டுள்ளது. மேலும் 125 தியேட்டர்களிலாவது ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

இதனிடையே, பெங்களூரில் காலா திரைப்படத்திற்காக சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response