காலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்-பெங்களூரில் பரபரப்பு..!

பெங்களூரில் காலா திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை ஹெல்மெட்டால் விஷமிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவிரி பற்றி, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தையடுத்து அவர் நடித்து இன்று ரிலீசாகியுள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதையும் மீறி காலை 11 மணி முதல், பெங்களூர் உட்பட கர்நாடக தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூர் மல்லேஸ்வரம், மந்திரிமாலில் உள்ள தியேட்டர் ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் ஹெல்மெட்டால், தியேட்டர் ஊழியர் தலைமீது ஓங்கியடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

காயமடைந்த தியேட்டர் ஊழியர் பெயர், பிரசாத் ஷெட்டி என தெரியவந்துள்ளது. இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையடுத்து காலா திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களை சுற்றிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அச்சமடைந்துள்ளபோதிலும் கணிசமான தமிழ் ரசிகர்கள், தியேட்டர் வாசல்களில் காலை முதல் கியூவில் நிற்பதையும் பார்க்க முடிகிறது.

சில ரசிகர்கள் ஒசூர், கிருஷ்ணகிரி தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர்.

Leave a Response