கர்நாடகாவில் தீர்ந்தது பிரச்சினை :130 தியேட்டர்களில் காலா வெளியாகும்..!

கர்நாடகாவில் ரஜினியின் காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

ஆனால் கர்நாடகாவில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், காலா படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, கர்நாடகாவில் காலா படத்தை திரையிட உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ், காலா திரைப்படத்தின் வெளியீடு உரிமையை வாங்கியுள்ளார். மொத்தம் 130 தியேட்டர்களில் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காலா தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட இருக்கிறது.

Leave a Response