காவிரிக்காக “காலா” வை எதிர்ப்பது சரியல்ல: ரஜினி பேட்டி..!

காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக ‘காலா’வை ரீலிஸ் செய்ய முடியாது என சொல்வது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, தடை விதித்துள்ளது.

இதனிடையே ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேசமயம் ‘காலா’திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும் படத்தை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக ‘காலா’வை ரீலிஸ் செய்ய முடியாது என சொல்வது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, “ ‘காலா’ படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ‘காலா’ வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேசமயம் கர்நாடகா முதல்வர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் என்னால் உணர முடிகிறது.

போராட்டம் நடத்தும் கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை; வர்த்தகசபை தடைவிதிப்பது சரியில்ல” என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இறுதியில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரஜினி, காலா வெளியாக கர்நாடகா சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Response