சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின்போது பேரணி செல்ல முயன்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. சபையும் இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்கிறது. இதுகுறித்து டெல்லியில் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச்சூழலை காக்க போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும் என்றார் எரிக் சோல்ஹைம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற நார்வே நாட்டின் சார்பில் அமைதித் தூதராக மிக முக்கிய பணியாற்றியவர் எரிக் சோல்ஹைம். பின்னர் நார்வே நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.