செய்தியாளர் சந்திப்பில் ஆவேசம் : ரஜினிக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்..!

செய்தியாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கையை நீட்டி ஆவேசம் காட்டினார். ரஜினியின் இந்த செயலுக்கு, தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆம்பிரகாம் லிங்கன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மீது ஆவேசம் காட்டுவது போல கையை நீட்டி ஒருமையில் ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்கு உரியது. அரசியல் தலைவர் ஆக உள்ள ரஜினிகாந்த் பொது வெளியில் குறிப்பாக செய்தியாளர்கள் கேள்விகளின் போது இத்தனை ஆவேசம் அடைவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. சினிமா படப்பிடிப்பு போலவே நிஜ வாழ்க்கையை நடத்த முயற்சிப்பது ரஜினிகாந்த் நடத்த உள்ள ஆன்மீக அரசியலுக்கு பலம் சேர்க்காது.

பொது வாழ்க்கைக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி. இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை யாராக இருந்தாலும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படி அநாகரீகமாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் (TMJA) வலியுறுத்துகிறது.

இனி எதிர்காலங்களில் இதுபோன்ற ஆவேசங்களும், அநாகரீகமான நடவடிக்கைகளும் இல்லாமல் பார்த்து கொள்வது அவரது அரசியல் பயணத்துக்கு பலம் சேர்க்கும் என்றும் ரஜினிகாந்த்துக்கு தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் அறிவுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response