கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழா:தமிழகத்திலிருந்து செல்பவர்கள் காவிரிக்காக கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும்-தமிழிசை

குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்ட மாநில முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காவிரி விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது, காவிரி வரவில்லை என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு என்றும், வந்துவிட்டால் உச்சநீதிமன்றம் காரணம் என்றும் கூறுவது ஒப்புக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது குறை கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.

மேலும், குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு தமிழகத்திலிருந்து செல்பவர்கள் காவிரிக்காக கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு கருப்பு சட்டை அணிந்து செல்லுமாறு தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response