எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு : சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா !

கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (15/05/2018) வெளியானது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸும், ஜேடிஎஸ்ஸும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

இதனிடையே தாங்கள் தனிபெரும்பான்மை பெற்றுள்ளோம் , அதனால் தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜகவும்ஆட்சி அமைக்க உரிமை கோரின. இதன் முடிவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

அதே சமயம் காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தருவதாக கூறி போடப்பட்ட கையெழுத்து கடிதத்துடன் குமாரசாமி ஆளுநரை சந்தித்து பேசினார். சட்டப்படி அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நேற்று மனு தாக்கல் செய்தது. அதை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது.

இதையடுத்து இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் , ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபை வளாகத்திலுள்ள காந்தி அருகே சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருடன் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், கர்நாடக காங். தலைவர் பரமேஷ்வரும் பங்கேற்றுள்ளனர். இதனிடையே ஈகிள்டன் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்த சட்டசபை நோக்கி புறப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் இரு கார்களில் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சட்டசபை வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

Leave a Response