காவிரி மேலாண்மை: மத்திய அரசு வரைவில் கூறப்பட்டுள்ளது என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில் முடிவெடுத்தால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டிருந்தது.

கடந்த 8ம் தேதி காவிரி பிரச்சினை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும், நேரம் கேட்டது மத்திய அரசு.

இதையடுத்து, மே 14ம் தேதி காவிரி வரைவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று மத்திய அரசு சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

இதில் 10 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும் என்றும், இந்த அமைப்பின் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம் என்றும், காவிரி அமைப்பில் முழு நேர உறுப்பினர்களாக 2 பேர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவிரி நடுவர்மன்றம் கூறிய பணிகளை இந்த அமைப்பு செயல்படுத்தும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், தெரிவித்துள்ளார். இருப்பினும் இது காவிரி மேலாண்மை வாரியம் என்று அதில் தெளிவாக கூறப்படவில்லை. எனவே இது ஆணையமா, குழுவா, வாரியமா என்பதை அறிந்து கொள்ள வரும் 16ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

16ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வரைவு குறித்து காவிரி தொடர்புள்ள அனைத்து மாநிலங்களும் கருத்து கூற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response