“இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைவிமர்சனம்..!

ஒரு மழை இரவில் நடக்கும் கொலை. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே களம். கொலையானது யார்? கொலையாளி யார்? எதற்காக கொலை? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

பரத் (அருள்நிதி) கால்டாக்ஸி டிரைவர், அவரின் காதலி சுசீலா (மஹிமா). இவர்களின் காதல் சென்று கொண்டிருக்கும் போது மஹிமாவுக்கு அறிமுகமாகிறான் கணேஷ் (அஜ்மல்). ஆரம்பத்தில் நல்லவனாக காட்டிக் கொள்பவன், பின்பு தன்னைக் காதலிக்கும்படி மஹிமாவை டார்ச்சர் செய்கிறான். இதனுடன் மஹிமாவின் தோழியான ரூஃபிலா (சாயா சிங்) வையும் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறான். இந்த இரண்டு பிரச்சனைகளும் அருள்நிதிக்குத் தெரியவர, அஜ்மலைத் தேடி கிளம்புகிறார். சென்ற இடத்தில் ஏற்கெனவே ஒரு பெண் இறந்துகிடக்க, அந்தக் கொலைப்பழி அருள்நிதி மேல் விழுகிறது. போலீஸ் அருள்நிதியைத் துரத்துவதும், கொலையாளியைத் தேடி அருள்நிதி ஓடுவதுமாய் கதை நகர்கிறது.

வழக்கம் போல் அருள்நிதி நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து தனக்கான பகுதியை நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அஜ்மலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வில்லன் வேடம், முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறார். ஒவ்வொருவரையும் பயமுறுத்தி பணம் பிடுங்கும் போது முகத்தில் காட்டும் மிரட்டல் மூலம் கதாபாத்திரத்தில் வலு பெறுகிறார். மஹிமா, ஆனந்தராஜ், நரேன், வித்யா பிரதாப், சாயா சிங், சுஜா வருணி, ஜான் விஜய் எனப் பலரும் இருக்கிறார்கள்.

ஆனால், யாரையும் மற்றும் பலராக இல்லாமல் எல்லோர் மேலும் கதை பயணிப்பதாய் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை கவனிக்க வைக்கிறது. அவர்களும் தங்கள் பங்கை உணர்ந்து கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனந்த் ராஜ் சில இடங்களில் அடிக்கும் டைமிங் வசனக்கள் சிரிக்க வைக்கிறது. “நாளைக்கு நீங்க இந்த மாதிரி நிலைமைல இருந்தீங்கன்னா, நான் கார்ல வந்து உங்களுக்கு லிஃபட் கொடுக்குறேன் சார். இது எங்க அக்கா மேல சத்தியம்” என்பது, அஜ்மலை பழிவாங்க சென்று பதறிப்போய் திரும்புவது என அவரது காமெடிகள் பரபர கதையில் சின்ன ரிலாக்ஸ்.

அர்விந்த் சிங் ஒளிப்பதிவு படத்திற்கு த்ரில்லர் கலரை கச்சிதமாக வழங்கியிருக்கிறது. இரவுக் காட்சிகள், கூடவே மழை அந்த உணர்வை பார்வையாளர்களுக்கும் அப்படியே கொடுக்கிறார். சாம் சி.எஸ் இசை படத்தின் த்ரில்லர் உணர்வை எந்த விதத்திலும் குலைக்காத அளவுக்கு பக்குவமாய் ஒலிக்கிறது. சான் லோகேஷின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்துகிறது.

மனிதர்களின் சபலங்கள் இருபுறமும் கூரான கத்தி என்பதை வைத்து படத்தின் உள்ளே நடக்கும் பிரச்சனைகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் மாறனின் ஐடியா நன்று. பரபரப்பான ஒரு த்ரில்லர் படத்தை எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ நல்ல பொழுதுபோக்கைத் தரும்.

Leave a Response