பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் பேராசிரியர் முருகன் (42), ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரையும் கைது செய்தனர். தற்போது மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில்விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், நிர்மலா தேவியும் உடல் நலக் குறைவை சுட்டிக் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின் போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, கருப்பசாமி, முருகன் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணையை, மே 18 -ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Response