நீட் தேர்வு:என் தம்பி தங்கைகளுக்கு உதவுவது எனது கடமை-நடிகர் விஷால்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுக்க கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வலுத்துவந்த நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டு இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் நீட் தேர்வுக்காக மையம் அமைக்கப்பட்டது குறித்து தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்குச் சென்று நீட் எழுதும் தமிழக மாணவர்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவிக்கரம் குவிந்து வருகிறது. நடிகர்கள் பிரசன்னா, அருள்நிதி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நீட் மாணவர்களின் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்தத் தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் : 97104 44442 ‘ எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

Leave a Response