கமல்ஹாசன் மய்யத்தில் இருப்பாரா? அல்லது அணி சாய்வாரா?..!

தமிழக அரசியலில் அணி மாற்றங்களுக்கான பேச்சுகள் சென்னையிலும் டெல்லியிலும் ஜரூராக நடைபெறுகின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் மய்யத்தில் இருப்பாரா? அல்லது அணி சாய்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தலைமையில் கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கின்றன. ஆனால் திடீரென திமுகவோ 3-வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது காங்கிரஸ், இடதுசாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கைகோர்த்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் யெச்சூரி, ராகுலையும் திருமாவளவன் சந்தித்து பேசினார். அதேநேரத்தில் திமுக, பாமகவை தங்களது அணிக்கு கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. திராவிடத்தை தூக்கிப் பிடிப்பதால் திமுக அணிக்கு கமல் கட்சி போகலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இல்லையெனில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தனி ஒரு அணியாக களம் காணலாம். இந்த இரு வாய்ப்புகளும் இல்லாத நிலையில் கமல்ஹாசன் நடுநிலையாக அதாவது மய்யத்திலேயே நின்று தேர்தல் களத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றே கூறப்படுகிறது.

Leave a Response