ஓபிஎஸ் மற்றும்11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்..!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சட்டசபையில், முதலமைச்சர் பழனிசாமி தனது தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது அதிமுக அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோகரன், மனோரஞ்சிதம், நட்ராஜ், சண்முகநாதன், செம்மலை, சரவணன், பாண்டியாரஜன், மாணிக்கம் ஆகிய 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நிறைவுபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் வழங்கிய அந்தத் தீர்ப்பில், ‘பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம் ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபநாயகருக்கு உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, எனவே முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகருக்குஉத்தரவிட முடியாது. எனவே திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திமுக சார்பில் தொடரப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Response