ரஜினிகாந்த்தை குறிவைத்து தாக்குவது ஏன்-நடிகர் ஆனந்த்ராஜ்

திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தை குறிவைத்து தாக்குவது ஏன் என்று தெரியவில்லை என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். திடீரென ஒரு இயக்குநர் ரஜினிகாந்த்தை குறி வைப்பது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள பிரச்சினை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் என்பன உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்தும் பேசியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் போட்ட ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யூனிபார்ம் போட்ட காவல்துறை அதிகாரியை அடித்தவர்களை கண்டித்தார் ரஜினி. உடனே திரைப்படங்களில் ரஜினி நடித்த காட்சிகளைப் போட்டும், காவல்துறையினரை அவர் அடித்த படங்களை போட்டு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

சினிமாவில் நிறைய போலீஸ்காரர்களை அடிக்கிறார் என்று பேசுகிறார்கள். சினிமா வேறு ரியல் வேறு. பழைய கதைகளை மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். அன்றைக்கு நிறைய தலைவர்கள் இருந்தார்கள். அப்போது ரஜினி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை தேர்தலுக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசியலில் இருந்து ரஜினியை பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கட்சி தொடங்க வேண்டும் அதன் பின்னர் இணைந்து செயல்படுவது பற்றி கூறுகிறேன். ரஜினிகாந்த் நிறைய கருத்துக்களை கூறி உள்ளார். திரை துறை சார்ந்த விசயத்திற்கு சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

ரஜினி தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய படத்திற்கு கொடி பறக்குது என பெயர் வைத்தார்.

முன்பு தலைவர்கள் இருந்ததால் ரஜினி கருத்து கூறாமல் இருந்து வந்தார். வீட்டில் பெரிய அண்ணன் இருந்தால் எப்படி சிறியவர்கள் அமைதியாக இருப்பார்களோ அப்படித்தான் ரஜினியும் இருந்தார். இப்போது அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளதால் ரஜினிகாந்த் இப்போது கருத்து கூறுகிறார்.

ஆனால் ரஜினியை டார்கெட் செய்து சிலர் பேசுகிறார்கள். எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும் என்றும் ஆனந்தராஜ் கூறினார்.

Leave a Response