பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல-கனிமொழி

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலியல் ரீதியாக மாணவிகளை செல்போனில் வற்புறுத்திய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார்.

தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என பதிவிட்டுள்ளார்.

Leave a Response