காற்றழுத்த தாழ்வு நிலை தென்தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் மேலும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே தென்தமிழக மீனவர்கள் மாலத்தீவு, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழக்த்தின் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கோடை மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக குன்னுரில் 10 சென்டி மீட்டர் மழையும், கோத்தகிரியில் 7 சென்டி மீட்டர் மழையும், நெல்லை மாவட்டம் சிவகிரியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இருதினங்களை பொறுத்தவரையில் தென்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும். தென்தமிழக பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்யக்கூடும்.

Leave a Response