காளி படத்திற்கான இடைக்கால தடை நீக்கியது-சென்னை உயர் நீதிமன்றம்…

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் காளி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் காளி திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி பிச்சர் பாக்ஸ் நிறுவன உரிமையாளர் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் விஜய் ஆண்டனி நடிப்பில், அவர் மனைவி ஏற்கெனவே தயாரித்த அண்ணாதுரை படத்தை வெளியிட்டதன் மூலம் தனக்கு 4 கோடியே 73 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் தராமல், காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து ஏப்ரல் 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஏப்ரல் 11-ம் தேதிக்குள் 4 கோடியே 73 லட்ச ரூபாயை விஜய் ஆண்டனி நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே தடை நீங்கும் என குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆதிகேசவலு ஆகியோர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் 2 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்த உத்தரவிட்டு, படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டனர்.

மேலும் படத்தை வெளியிடுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடையை நீக்குவதாகவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Leave a Response