பச்சைக்கும் சேர்த்து கருப்புக்கொடி காட்டுவோம்-சீமான்

தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி அழுத்தம் தந்தால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். அதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய சீமான், பச்சைக்கும் சேர்த்து கருப்புக்கொடி காட்டுவோம் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகளை இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய சீமான், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகமிழைத்தும், திட்டமிட்டு கர்நாடகத் தேர்தலுக்காக மத்திய அரசு கள்ளமௌனம் சாதித்து வருகிறது.

பன்னெடுங்காலமாக இந்திய அரசால் வஞ்சகம் செய்யப்பட்டு அதன்மூலம் தமிழக நிலவியல் மீது போர் தொடுக்கப்பட்டு இருப்பதன் விளைவாகத் தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்து தமிழர் நிலமே போர்க்கோலம் பூண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் வரும் பிரதமருக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்று அமைச்சர் சொல்கிறார். அங்கேயும் நாங்கள் கறுப்புக்கொடி காட்டுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

Leave a Response