தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பல ஆயிரம் பேர் கைது!

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சியினர் மறியல் போராட்டத்தால் ரயில் மற்றும் பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உசிலம்பட்டியில் திமுக நகரச் செயலர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினார் 300 பேரை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கைது செய்யப்பட்டார். அங்கு கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம், செட்டியார்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 600 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். வடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு மறியலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார். மேலும் என்.எல்.சி. நுழைவு வாயில் முன் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுப்பட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் சென்னை-கோவை ரயிலை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுப்பட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். காவிரி வாரியம் அமைக்க கோரி நெல்லையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக, உள்ளிட்ட தோழமை கட்சிகள் தூத்துக்குடியில் இருந்து திருச்சந்தூர் செல்லும் ரயிவை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தண்டவாளத்தில் அமர்ந்து நின்றும், ரயிலில் ஏறி நின்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Leave a Response