அரசின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் வேறுமாநிலங்களுக்கு போகின்றன : ராமதாஸ்

சென்னை : தமிழக அரசின் தொடர் அலட்சியத்தால் ஆசியாவின் டெட்ராய்ட் என்கிற பெருமையை தமிழகம் வேகமாக இழந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை அமைக்க முன் வந்த ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் சமீபத்தில் ஆந்திராவில் தனது புதிய ஆலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசின் அலட்சியத்தால் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு கடந்த ஓராண்டில் வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித்துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இந்த முதலீட்டாளர்களைக் கவர ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது ஒரு புறமிருக்க, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விரும்பிய நிறுவனங்களை தமிழக ஆட்சியாளர்கள் விரட்டியடித்தனர் என்பது தான் இதற்கு காரணமாகும்.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் ரூ.1600 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 18 லட்சம் ஊர்திகளைத் தயாரிக்கும் ஆலையை தமிழகம் அல்லது கர்நாடகத்தில் அமைக்கத் திட்டமிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசுடன் நடத்திய பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க முடிவு செய்த அந்த நிறுவனம், சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டிக்கு அருகிலுள்ள மதனபள்ளம் என்ற ஊரில் இடத்தைத் தேர்வு செய்து கடந்த வாரத்தில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறது.

அங்கு அந்த ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்க ரூ.1600 கோடியில் பல்வேறு சிறு தொழிற்சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.உண்மையில் ஹீரோ மோட்டார் வாகனத் தயாரிப்பு ஆலை சென்னைக்கு அருகில் திருப்பெரும்புதூரிலோ அல்லது ஓசூரிலோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இந்த ஆலை ஆந்திராவுக்கு சென்றதற்கு முதல் காரணம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பதில் காட்டப்படும் அலட்சியம் தான்.

இரண்டாவது காரணம் புதிய தொழிற்சாலைகளை தமது மாநிலத்திற்கு அழைத்து வருவதில் ஆந்திர அரசு காட்டும் ஆர்வமும், வழங்கும் சலுகைகளும் தான். ஹீரோ நிறுவன ஆலை தமிழகத்திலோ, தமிழகம் ஒத்துவராத நிலையில் கர்நாடகத்துக்கோ செல்லும் வாய்ப்பு இருந்த நிலையில், அந்த நிறுவன உரிமையாளர் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அப்போது நடத்திய 30 நிமிட பேச்சுக்களில் அந்த ஆலையை தமது மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டார். அதனால் தமிழகம் நல்ல முதலீட்டை இழந்தது.

ஹீரோ நிறுவனம் மட்டும் தான் என்றில்லாமல் ரூ.11,000 கோடி முதலீட்டிலான கியா மகிழுந்து ஆலை, ரூ.1800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ், ரூ.350 கோடியில் அசோக் லேலண்ட் வாகன ஆலை, டி.வி.எஸ் நிறுவனத்தின் சுந்தரம் பிரேக்ஸ் நிறுவனம், பாரத் போர்ஜ் நிறுவனம், சில தென் கொரிய நிறுவனங்கள் என மொத்தம் ரூ.25,000 கோடி முதலீடுகள் கடந்த ஓராண்டில் ஆந்திராவில் செய்யப்பட்டு உள்ளன. இவை அனைத்துமே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டியவை. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் ஏற்கனவே தமிழகத்தில் அமைந்துள்ளன. அதனால் அவற்றின் விரிவாக்கமோ, கூடுதல் தொழிற்சாலையோ தமிழகத்தில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு ஓடுகின்றன.

ஆந்திராவின் ராயலசீமா பகுதியை மோட்டார் வாகன உற்பத்தி மண்டலமாக மாற்ற தீர்மானித்துள்ள சந்திரபாபு நாயுடு, அதற்காக அதிரடியாக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் ரூ.25000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள ஆந்திரம் அடுத்தக்கட்டமாக சுசுகி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறையில் ரூ.1500 கோடி முதலீடுகளை மட்டுமே ஈர்த்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியில் 53.41சதவீதம் தமிழகத்திலிருந்து செய்யப்பட்டு வந்தது. அதனால் ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்தது. ஆனால், அந்தப் பெருமையை தமிழகம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறது. கண்களுக்கு எட்டிய தொலைவு வரை தமிழகத்திற்கு வாகனத்துறை முதலீடுகள் வருவதற்கு வாய்ப்புகள் தென்படவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Response