காவிரி விவகாரம் : விரைவில் இன்னொரு ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ நடக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை!

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே சாக்குப்போக்கு சொல்வதை மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என்று விவசாயிகள் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் தாங்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. கர்நாடகாவில் தேர்தல் வர உள்ளதால் அம்மாநிலத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக விவசாயிகள் இறந்தாலும் மத்திய அரசு கண்டுக்கொள்ளப் போவதில்லை என்று அய்யாக்கண்ணு கூறினார். இந்தியாவின் உச்சப்பச்ச அதிகாரம் மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பே இவ்வாறு இருந்தால், சாதாரண பாமரனுடைய நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வு தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது.

காவிரி வாரியம் அமைக்கப்படாவிட்டால் தமிழகத்தில் வரலாறு காணாத போராட்டங்கள் வெடிக்கும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி வாரியம் அமைக்காமல் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். மத்திய அரசை கண்டித்து மாபெறும் போராட்டத்தை முன்னெடுக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Response