வெயிலின் தாக்கத்தால் நெல்லையில் வேகமாக பரவும் அம்மை நோய் !

தமிழகத்தில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உயர் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக, வெயில் காலத்தில் பரவும் நோய்களில் மிக முக்கியமானது சிக்கன் பாக்ஸ் என்றுஅழைக்கப்படும் சின்னம்மை நோயாகும்.

இந்நோய் தும்மல் மற்றும் இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவும் தன்மை உடையது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் கொப்புளங்கள் தோன்றும். இந்த கொப்புகளங்களில் கசியும் நீரை தொடுவதன் மூலமும் இந்த நோய் பரவும்.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் நெல்லையில் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் வாட்டுகிறது.
இந்த வெயில் காரணமாக நெல்லை மாவட்டத்தில் அம்மை நோயால் பல்வேறு பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாளையில் பள்ளி மாணவர்களையும் இந்நோய் விட்டுவைக்கவில்லை. அம்மை நோய் தாக்கியுள்ளோர் வெயிலில் அலைந்தால் நோய் அதிகமாக பரவும் என்பதால் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் உடல் சூட்டை குறைக்கும் வகையில் வேப்பிலை அரைத்து பூசுதல், வேப்பிலை சாறை குடித்தல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

நோய் தாக்கியவர்களின் உடைகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வதோடு, உடல்சூட்டை தணிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நெல்லையின் பல்வேறு பகுதிகளில் அம்மை நோய் தீவிரமாக பரவிவருவதால் மாவட்ட சுகாதாரத்துறை பள்ளிமாணவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

Leave a Response