முஸ்லிம்களின் நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா ஹலாலாவுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய சட்ட ஆணையமும் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் மக்களிடையே பின்பற்றப்படும் முத்தலாக் சட்டவிரோதமானது என்று அதிரடி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அடுத்ததாக நிக்கா ஹலாலா, பலதார மணம் போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கிறது.முத்தலாக் குறித்த கடந்த ஆண்டு விசாரணை செய்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முத்தலாக் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு முஸ்லிம் ஆண் 4 திருமணங்கள் வரை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது, இதற்கு ஆங்கிலத்தில் பாலிகமி எனப்படுகிறது.

நிக்கா ஹலாலா என்பது, விவாகரத்து செய்த தம்பதி மீண்டும் மணம்புரிந்து சேர்ந்து வாழும் முறையாகும். இதில் பெண் மட்டும் வேறு ஒருவரை மணம் புரிந்து அவரை உடனடியாக விவாகரத்து செய்து விட்ட பிறகு தான் தனது கணவரை மறுமணம் செய்ய முடியும்.

இந்த இருமுறைகளும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் 3 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் டெல்லி பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக இருக்கும் முஸ்லிம்களிடையே பின்பற்றப்படும் நிக்கா ஹலாலா, பலதாரமணம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15,21 ஆகியவை வழங்கியுள்ள உரிமைகளுக்கு விரோதமானதாகும். இதனால் முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் இந்திய தண்டனைச் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான பிரிவாகும். இதில் முத்தலாக் என்பது, ஐபிசி 498ஏ பிரிவின்படி, கணவர் அல்லது கணவரின் உறவினர் மனைவியை கொடுமைப்படுத்துதலின் கீழ் வரும், நிக்கா ஹலாலா என்பது ஒருபெண்ணை பலாத்காரம் செய்வதாகும், இது ஐபிசி 375 பிரிவில் வரும், பலதாரமணம் என்பது, ஐபிசி 494 பிரிவில் வரும் ஆதலால், இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

இதேபோன்று கடந்த 14-ம்தேதி ஒரு பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இ ருந்தது. டெல்லியைச் சேர்ந்த அந்த பெண் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், நிக்காஹலாலாவை தடை செய்ய வேண்டும். இது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைக்கு பாதிப்பாக இருக்கிறது. இந்த முறைகளால்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய அனுமதியில்லாமல், மற்றொரு பெண்ணை எனது கணவர் திருமணம் செய்துள்ளார். போலீஸாரும் வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மார்ச் 18-ம்தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், முஸ்லிம் தனிச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து திருமணங்களும் பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். ஒரு ஆண் பலதார மணம் செய்வதை அனுமதிக்கும், முஸ்லிம் சட்டம், பெண்ணுக்கு அனுமதிப்பதில்லை. நிக்கா ஹலாலா முறையும் பெண்களின் அடிப்படை உரிமைக்கு விரோதமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிக்கா ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகியவற்றின் அரசியலமைப்பு அங்கீகாரம் குறித்து விசாரிக்க தனியாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உருவாக்கப்படும். நிக்கா ஹலாலா, பலதாரமணம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படும். இதுகுறித்து மத்திய அரசு, மத்திய சட்ட ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.

Leave a Response