கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் இன்று முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காலை வழக்கம்போல அனைத்துத் திரையரங்குகளும் இயங்குகின்றன.
டிஜிட்டல் சேவைக் கட்டணங்களுக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதுப்படங்களை வெளியிடுவதை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து தியேட்டர்களும் சில சலுகைகள் கோரி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். மார்ச் 16-ம் தேதியிலிருந்து இந்த ஸ்ட்ரைக் நடந்தது.
இந்த ஸ்ட்ரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்த திரையரங்க உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் (சென்னை மட்டும்), ஆளே இல்லையென்றாலும், தியேட்டர்களை ஓட்டுவோம் என்று கூறி வந்தனர். இவர்களுக்கு அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் துறைச் செயலாளர் பேச்சு நடத்தினர். இதில் ஸ்ட்ரைக் நடத்தமாட்டோம் எனக் கூறிய அபிராமி ராமநாதனும் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தியின் முடிவில், வெள்ளிக்கிழமை மார்ச் 23-ம் தேதியிலிருந்து அனைத்து தியேட்டர்களும் வழக்கம்போல இயங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் புதுப்பட வெளியீடுகள் இருக்காது. இருக்கும் பழைய படங்கள், அண்மையில் வெளியான படங்களையே ஓட்டுவதென தியேட்டர்கள் முடிவு செய்துள்ளன. தியேட்டர் கட்டணக் குறைப்பு, தின்பண்ட விலைக் குறைப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள நிபந்தனைகளை பேசித் தீர்ப்பதாக அறிவித்துள்ளனர்.
திரையுலகில் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள புதுப்பட வெளியீடு நிறுத்தம், ஷூட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகள் நிறுத்தம் தொடர்கிறது.