தெலங்கானாவில் மால்களின் பார்க்கிங் கட்டணம் ரத்து ? தமிழகத்தில் எப்போது ?

parking7844-1521608999

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த மாநில அரசு.

 அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மால்களில் பார்க்கிங் கட்டணம் என்பது இல்லை. அல்லது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் அமைக்கப்பட்ட அனைத்து மால்களிலும் வாகன நிறுத்தக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது. அதிலும் திரையரங்குகளுடன் கூடிய மால்களில் குறைந்தபட்சம் ரூ 200 வரை வாகன நிறுத்தக் கட்டணம் வாங்குகின்றனர்.

இந்த நிலையை மாற்றுமாறு எவ்வளவோ கோரிக்கைகள் எழுந்தும் அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு, மல்டிப்ளெக்ஸ் மால்கள், ஷாப்பிங் மால்களில் வாகன நிறுத்தக் கட்டணத்தை ரத்து செய்யக் கூடிய வகையில் முறைப்படுத்தியுள்ளது.

இதன்படி, முதல் அரை மணி நேரத்துக்கு எந்த வாகனத்துக்கும் கட்டணம் கிடையாது.

அரை மணியிலிருந்து ஒரு மணி வரை, வாகன உரிமையாளர் அந்த மாலில் ஏதேனும் பொருள் வாங்கி அதற்கான ரசீதைக் காட்டினால் கட்டணம் கிடையாது.

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வாகனம் நிறுத்துவோர், அந்த வாகன நிறுத்துக் கட்டணத்தை விட அதிக அளவுக்கு பொருட்கள் வாங்கி, அந்த ரசீதைக் காட்டினால் போதும், கட்டணம் கிடையாது. சினிமா டிக்கெட்டும் இதில் அடங்கும்.

இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஹைதராபாத் உள்பட தெலங்கானா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், இதை மீறும் மால்கள் – மல்டிப்ளெக்ஸ்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது

Leave a Response