சிறையிலிருந்து 15 நாட்கள் பரோலில் வந்தார் சசிகலா..!

sasi

உடல் நலக்குறைவால் உயிரிழந்த கணவர் ம.நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, 15 நாட்கள் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு ம.நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்பின் அவரது உடல், எம்பாமிங் செய்யப்பட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ம.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சார்பாக பரப்பன அக்ரஹார சிறையில் 15 நாட்களுக்கான பரோல் மனு வழங்கப்பட்டது. இந்த பரோல் மனுவை ஆய்வு செய்த சிறைத்துறை நிர்வாகிகள் அதற்கு அனுமதி வழங்கியதால், பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்துள்ளார். மேலும், பரோலில் வெளியே இருக்கும் நாட்களில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, அரசியல் தலைவர்களை சந்திக்கவோ கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது .

தற்போது சசிகலா, நடராஜனின் சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறும் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தஞ்சை சென்றுக்கொண்டு இருக்கிறார். முன்னதாக, கடந்த முறை ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response