ஒரு நடிகையின் டைரி – விமர்சனம்!!

ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றி இந்திய சினிமாவில் நிறைய படங்கள் வந்துள்ளன. தி டர்ட்டி பிக்சர், ஹீரோயின், ஒரு நடிகையின் வாக்குமூலம் என அடுக்கி கொண்டே போகலாம். இந்த வரிசையில் நடிகை சில்க்கின் வாழ்கையை பற்றிய படம் என்ற அடைமொழியோடு வெளியாகியுள்ளது ஒரு நடிகையின் டைரி. சனாகான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை அப்படியே தமிழ் படுத்தி வெளியிட்டுள்ளனர்.

ஒரு அனாதையான நாயகியை எடுத்து வளர்க்கிறார் ஒரு  அம்மா, நாயகிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய இடங்களில் அவரை ஆசைக்கு இணங்கசொல்லி நிறைய பேர் வற்புறுத்த, அவர்களிடமிருந்து விலகி ஓடும் நாயகி, ஒரு சந்தர்பத்தில் ஒருவரின் அட்வைஸ் கேட்டு, அவருடன் அவரின் பங்களாவிலேயே தங்குகிறார். நிறைய விஷயங்களை கற்று கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்கிறார்கள். அந்த நேரத்தில் அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதை கேட்டு அதிர்சியாகிறார் நாயகி. அந்த பையனும் நாயகி மீது மோகம் கொள்கிறான். இந்த சூழலில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

சனாகான் நாயகியாக அதாவது ஸ்மிதா என்ற கேரக்டரில் நன்றாகவே நடித்திருக்கிறார். மற்ற படங்களில் கிளாமர் காட்டி நடிக்கும் சனாகான் இந்த படத்தில் கிளாமரை கட்டிக்கொண்டு நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் இன்னும் தாராளம். சனாகான், அவரின் அம்மாவாக வரும் சாந்தி வில்லியம்ஸ் தவிர பெரும்பாலான கதாபத்திரங்கள் மலையாள வாசம். அதுதவிர நிறைய மலையாள வசனங்கள்.

படத்தில் நிறைய குறைகள். கதை எந்த காலகட்டத்தில் பயணிக்கிறது என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சில காட்சிகளில் பழைய தயாரிப்பு நிறுவனங்களை காட்டுகிறார்கள், சில காட்சிகளில் தற்போதைய காலகட்டத்திலும் இருக்கிறது. சில காட்சிகள் அப்படியே ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தை ஞாபகபடுத்துகின்றன. ஒரு பாடலில் அரவிந்த் ஆகாஷ் ஆடிவிட்டு போகிறார்.

சஜித் மேனனின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. குறிப்பாக கேரளா காட்சிகளில். இசையமைப்பாளர் பாடல்களில் ஓரளவுக்கு இசைத்திருக்கிறார். பின்னணி இசை குறிப்பிடும்படி உள்ளது.

இயக்குனர் அனில் படத்தின் திரைக்கதையிலும் தனது கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருப்பார்.