குரங்கணி காட்டுத் தீ விபத்து எதிரொலி : அரவக்குறிச்சி அருகேயுள்ள ரெங்கமலை கோயிலுக்குச் செல்ல கட்டுப்பாடு !

vadamalli
குரங்கணி காட்டுத் தீ விபத்து எதிரொலியால் அரவக்குறிச்சி அருகேயுள்ள ரெங்கமலை கோவிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது.

அரவக்குறிச்சியிலிருந்து 12 கிமீ தொலைவில் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புகழ் பெற்ற ரெங்கமலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்திலிருந்து 3 கிமீ பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பாதையில் நடந்து சென்றால் மலை உச்சியிலுள்ள மல்லீஸ்வரர் கோவிலை அடையலாம். இங்கு பண்டிகை நாட்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இப்பகுதி சுற்றுப்புற மக்களுக்கு இது சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

ஒவ்வெரு ஆண்டும் ஆடி 18 விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கரூர், வேடசந்தூர், இடையகோட்டை, ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்தும் புதுமணத் தம்பதிகள், காதலர்கள், பெரியவர்கள் சிறுவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். கோவிலில் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மற்ற நாட்களிலும் இந்த மலைக்கு சென்று பலர் வருவர். இந்நிலையில் தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து சம்பவ எதிரொலியாக இந்த கோவிலுக்குச் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:-

குரங்கணி காட்டுத் தீ விபத்து சம்பவத்தையடுத்து இந்த கோவிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்ல காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை தான் அனுமதி உண்டு. முன்னர் இரவில் கூட மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். மாலை 4 மணிககுள் மலையிலிருந்து கீழே இறங்கி விட வேண்டும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை மலை மேல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை கோயிலுக்கு செல்பவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த விவரங்களை வனக்காவலர் ஒருவர் பதிவு செய்த பின்தான் மேலே செல்ல அனுமதிப்படுவர் என்றனர்.

Leave a Response