தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு..

tamil-letter24-600-1517571024

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இந்த முயற்சிக்குத் துணை நின்றார்.
ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் பி.பி.சவுத்ரி அளித்துள்ள எழுத்து வடிவிலான அறிவிப்பில் இந்த முடிவு கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த முடிவை ஏற்காததால் தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலை மட்டும்தான் இதற்குத் தடையாக உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அமர்வு தமிழை வழக்காடு மொழியாக ஏற்காத காரணத்தால் இதற்கு வாய்ப்பு இல்லை என்று கைவிரித்துள்ளார்.

Leave a Response