திருமண மோசடி வழக்கு.சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்ருதி

act1

புதுமுக நடிகையான ஸ்ருதி, ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்தார். இவரை ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் பாலமுருகன் என்பவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் அவரது புகைப்படத்தைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஸ்ருதியும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த ஸ்ருதி, பாலமுருகனிடம் இருந்து ரூ.41 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக, பாலமுருகன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு வாரமாக நடந்த விசாரணையின் அடிப்படையில், மோசடி பணத்தில் வாங்கிய சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையின்போது ஸ்ருதி போலீசாரிடம் கூறும்போது, லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளைக் கற்றேன். என்னுடைய செலவுகளையும் என்னைத் திருமணம் செய்ய விரும்பியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பல பேருடன் பேசி வந்தேன். பல செல்போன், சிம்கார்டுகளை இதற்காக பயன்படுத்தினேன். நான் திருமணம் செய்வேன் என எண்ணி பணத்தை வாரி கொடுத்தார்கள். 3 ஆண்டுக்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தினேன் என்று ஸ்ருதி கூறினார்.

இதையடுத்து நேற்று மாலை போலீசாரின் விசாரணை முடிந்து, கோவை 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் 4 பேரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஸ்ருதி உட்பட நான்கு பேரையும் கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Leave a Response