என்னோட மூன்றாவது அவதாரம் – நடிகர் விஷால் பேட்டி!!

நடிகர் விஷால் ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தன் முதல் படத்துக்கு ‘பாண்டிய நாடு’ என்று தலைப்பிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார்.

இந்த படத்தை பற்றிய அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஷால், நிருபர்களிடம் பேசுகையில், “என் சினிமா வாழ்க்கையை முதலில் உதவி இயக்குநராகத் தொடங்கினேன். ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். மூன்றாவதாக இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறேன். இன்னும் ஒரே ஒரு ஆசை பாக்கி உள்ளது. அது இயக்குனராகும் கனவு. அதுவும் நடக்க வேண்டும்.

எங்க அப்பா தயாரிப்பாளர். அண்ணனும் தயாரிப்பாளர். மூன்றாவதாக நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். அவர்களிடம் கற்றுக் கொண்டதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

இந்த நேரத்தில் என்னை செதுக்கிய இயக்குநர்கள் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா முதல் திரு, சுந்தர்.சி, பூபதி பாண்டியன் தற்போது சுசீந்திரன் வரை மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஆன பின்பு ஒரு ‘அலாரம் கடிகாரத்தை’ விழுங்கியது போல் உணர்கிறேன். காலையில் வழக்கமாக விழிக்கும் நேரத்தை விட, ஒன்றரை மணி நேரத்துக்கு முன் விழிப்பு வந்து விடுகிறது,” என்றார்.

அவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, “திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திருமணம் நடக்கும் போது நடக்கட்டும். இப்போதைக்கு என் கவனம், ‘பாண்டிய நாடு’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இந்த படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.