நாகர்கோவிலில் தாம் படித்த அரசுப்பள்ளியை பார்வையிட்ட இஸ்ரோ தலைர் சிவன்

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தில் தான் படித்த அரசு தொடக்கப்பள்ளியை இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள சிவன் பார்வையிட்டார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரண்குமார் பதவி முடிவடைந்ததால், இஸ்ரோவின் புதிய தலைவராக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் கே. சிவன் நியமிக்கப்பட்டிருக்கிற.

ISRO sivan

சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமம் ஆகும். இந்நிலையில், பொங்கல் திருவிழாவையொட்டி சிவன் தனது சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தார்.

அவருக்கு சரக்கல்விளை கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து சிவன் தான் படித்த சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று அதனை பார்வையிட்ட பின் ஊர்மக்களை சந்தித்து உரையாடினார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பள்ளித்தலைமை ஆசிரியர் அப்பாவு கூறும்போது, சிவனின் தந்தை கைலாசவடிவு மாந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார். தந்தை மரத்தில் ஏறி மாங்காயை பறித்துப் போட, சிவனும், அவரது அண்ணனும் மரத்தடியில் நின்று மாங்காய் மண்ணில் விழாதவாறு சாக்குப்பையில் சேகரிப்பர். சிவன் 12 வயது சிறுவனாக இருந்தபோதே தந்தையுடன் மாங்காய்களை சந்தைக்கு கொண்டுசென்று விற்று வருவார் என்று குறிப்பிட்டார்.

மேலும், இஸ்ரோ தலைவராக உயர்ந்திருப்பதற்கு சிவனின் ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, புத்திக்கூர்மை, எளிமை போன்றவைதான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Response