பொங்கல் லீவுல போங்க, ஜாலியா சிரிச்சுட்டு வாங்க! ‘குலேபகாவலி’ சினிமா விமர்சனம்

Gulaebaghavali Review
தமிழ் சினிமாவுக்கு இந்த வருட துவக்கத்தில் ‘வாங்க, கலகலனு சிரிச்சுட்டு போங்க’ டைப்பில் முதல் படம்!

வெள்ளைக்காரனிடமிருந்து தன் தாத்தா ஆட்டயப் போட்டு புதைத்து வைத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை, பேரன் கண்டுபிடித்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பதுதான் கதை!

வைரத்தைக் கண்டுபிடித்துக் கடத்தி அந்த பேரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பு ஹீரோ பிரபுதேவாவுக்கு!சூப்பர் ஹீரோத்தனம் எதுவும் காட்டாமல் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாய் செய்திருக்கிறார். மனிதரிடம் நடிப்பில் இன்னமும் அதே ஆரம்பகால இளமையும் நடனத்தில் அதே பழைய எனர்ஜியும் இருக்கிறது!

தோலுரித்த மரவள்ளிக்கிழங்கை வெண்ணெயில் குளிப்பாட்டியது போலிருக்கிறார் ஹன்ஸிகா. அவருக்கே உரிய கிறுக்குச் சிரிப்பை அங்கங்கே தூவுகிறார். பாடல் காட்சிகளில் பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து ஆடியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்!

ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு, முனீஸ்காந்த் ராமதாஸ் அவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்! மொட்டை ராஜேந்திரன் எலும்புக் கூட்டை தன் அம்மாவாக நினைத்து கொண்டாடித் தீர்க்கும் காட்சிகள் ரகளை!

‘மண் வாசனை’ ரேவதி இதுவரை இல்லாத அளவுக்கு ஜாலியான கேரக்டரில் வருகிறார். காமெடி நடிப்புக்காக மனோரமாவைக் கொஞ்சம், கோவை சரளாவைக் கொஞ்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார்!

மொட்டை ராஜேந்திரனுக்கு மனைவியாய் அந்த வாட்டசாட்ட பொண்ணு யாருப்பா… அட ‘சமையல் மந்திரம்’ திவ்யா!

எத்தனை பேர் இருந்தாலும் தனியாகத் தெரியும் வேல ராமமூர்த்தி இதில் அந்த தனித்துவம் இழந்திருக்கிறார். திருஷ்டிப் பரிகாரம் போல!

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் மனதுக்குள் இறங்காவிட்டாலும் இதமாய் வருடிப் போகத் தவறவில்லை! பின்னணி இசை வாங்குன காசுக்கு ரொம்பவே அதிகமாய்!

காஸ்ட்யூம் டிசைனர் ரசனைக்காரர் பிரபுதேவாவை ஃபிட்டாக காட்டவும் ஹன்ஸிகாவை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு காட்டவும் மெனக்கெட்டிருக்கிறார்!

சீரியஸான கதையை காமெடியாக பண்ணுவதென முடிவானபின் லாஜிக்கெல்லாம் எதற்கு என தூக்கிப் போட்டுவிட்டு திரைக்கதையில் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்!

ஜாலியா போங்க, லாஜிக்கையெல்லாம் தூக்கி தூரமா வெச்சுட்டு கலகலனு சிரிங்க, வாங்க!

Leave a Response