அட இதுவும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” மாதிரியான படமாமே!

Mannar Vagaiyera Audio Launch Singaravelan speech_marked
A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் பேசியபோது, “இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது அந்த சமயத்தில் வெளியான விமலின் படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. ஆனாலும் கதையின் மீது இயக்குனர் பூபதி பாண்டியன் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொதுவாக விமலின் படங்களுக்கு ஆகும் பட்ஜெட்டைப்போல மூன்று மடங்கு இதற்கு செலவழித்துளோம்.. ஆனால் இந்த நிமிடம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தின் வியாபாரம் முடிந்து நாங்கள் படத்திற்காக செலவழித்த பணம் திரும்பி வந்துவிட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி.

விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தையே 7௦ நாட்களில் எடுத்தார் பூபதி பாண்டியன். ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 83 நாட்கள் நடந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 18 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கியுள்ளோம்.. அந்த அளவுக்கு படத்தில் பெர்பெக்சன் பார்த்துள்ளோம். செலவு கூடுகிறதே என வருத்தப்பட்டபோது, தனது சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்தார் இயக்குனர் பூபதி பாண்டியன். நிச்சயம் இந்தப்படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விமல் இந்தப்படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப்படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண்போகாது. 2018ல் அவர் நடிப்பில் 6 படங்கள் தயாராக இருக்கின்றன. ஜனவரி-17ல் வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி டைரக்சனில் விமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

பொங்கல் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாவது உறுதி. நிறைய படங்கள் வருகின்றதே என சிலர் கேட்டார்கள்.. இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும் பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீசாவது உறுதி.” என்றார் சிங்காரவேலன்.

வரும் ஜன-12ல் பொங்கல் வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வருகிறது.

Leave a Response