மதுவிலக்கு கொள்கைக்காகக் காட்சியை மாற்றிய இயக்குனர்!!

ஐ சினிமாஸ் சார்பில், யாசின் தயாரிக்க பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் நாலு பேரும் ரொம்ப நல்லவங்க. இந்தத் திரைப்படத்திற்காகப் படப்பிடிப்பு நடத்த நடிகர், நடிகையுடன் சேர்த்து தொழில்நுட்பக் கலைஞர்கள் என 100 பேர் கொண்ட குழு அந்தமான் சென்றது.

அந்தமானின் அழகிய கடற்கரை உள்ள இடங்களில் ஒன்றான சிரியா டாப்பு என்ற இடத்தில், வில்லன் அப்சர்கான் அறிமுகமாகும் காட்சி படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் அனைவரும் அங்கு கூட, படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் இயக்குனர் ஜோவி, ஒளிப்பதிவாளர் தரன் டி தாமு மற்றும் உதவி இயக்குனர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. படப்பிடிப்புக் குழுவினரோ என்ன செய்வது என்று தெரியாமல் நின்று விட, வாக்குவாதம் முடிந்ததாகத் தெரியவில்லை. இயக்குனரிடமோ ஒளிப்பதிவாளரிடமோ என்னவென்று கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

கடைசியாக வில்லன் நடிகர் அப்சர்கான் டைரக்டர் ஜோவியிடம் என்னவெனக் கேட்க. ஐ சினிமாவைப் பொருத்தவரை நடிகர், தொழில் நுட்பக்கலைஞர்கள் யாவரும் மது, புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டு அனைவரும் ஒப்புதலும் கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் போது வில்லனின் அறிமுகக் காட்சியில் வில்லன் மது அருந்துவது போல உள்ளது, அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு சாராரும், நிஜத்திற்கும் கதைக்கும் சம்மந்தமில்லை என உதவி இயக்குனர்களும் கூற, கடைசியில் கொள்கையை மாற்றிக் கொள்ளாமல் இயக்குனர் காட்சி அமைப்பை மாற்றி எடுத்தார். எடுத்த காட்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

“திருட்டையே தொழிலாகக் கொண்ட மூன்று இளைஞர்கள், திருட்டு, பொய், புரட்டு, பித்தலாட்டம் என்று எதுவுமே தெரியாத பவர் ஸ்டாருடன் சேருகின்றனர். பவருடன் சேர்ந்த திருடர்கள் திருந்துகின்றனரா அல்லது திருடர்களுடன் சேர்ந்த பவரும் திருடன் ஆகிறாரா என்பது தான் கதைச் சுருக்கம்”

இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஜோவி. இவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் பல படங்களுக்கு இணை, துணை இயக்குனராகவும் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியவர். ஜோவி, இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் பெல்ஹாமிலிருந்து வந்திருக்கும் யாசின் ஹவேலி கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதுடன் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார். இன்னொரு கதாநாயகன் பாலாஜி இவருக்குத் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கிறார். கதாநாயகிகளாக திஷா, சினேகல் மற்றும்  சுரேஷ், அந்தமான், திருப்பதி, அப்சர்கான் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜோவியின் நாலு பேரும் ரொம்ப நல்லவங்க படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தில் ஐந்து பாடல்கள்  இடம்பெறுகின்றன. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, அந்தமான் போன்ற இடங்களில்  நடைபெற்றுவருகிறது.