காட்டு யானைகளை விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை!

yanai2

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் கிராமத்தில் குருடி மலையிலிருந்து வெளியேறும் 5 யானைகள் ஊருக்குள் ஊடுருவி விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தினமும் மாலை 5 மணியானதும் மலைப்பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறும் யானைகள் ஊருக்குள் வலம் வருகின்றன. இரவு முழுவதும் பூச்சியூர், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடமாடும் யானைகள் காலையில் மலைப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. யானைகளை விரட்டினால் தடாகம் பகுதிக்கு சென்று விடுகின்றன. அங்கு சென்று விரட்டினால் பூச்சியூர் பகுதிக்கே மீண்டும் வந்து விடுகின்றன. இதே போல் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் போக்கு காட்டி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

12-elephant343-600

சில தினங்களுக்கு முன், 4 காட்டு யானைகள் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் ஊருக்குள் புகுந்தன. அதில் ஒரு யானை ராமாத்தாள் என்ற 80 வயது மூதாட்டியை தாக்கி கொன்றது. தாக்குதலில் துளசியம்மாள் என்ற மற்றொருவர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இந்த யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோவை சாடி வயலில் இருந்து சுஜய் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டு வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் 50 பேர், யானைகள் மலைப்பகுதியிலிருந்து வெளியேறாமல் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், யானைகள் தினமும் ஊருக்குள் வந்து செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பூச்சியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குருடி மலையிலிருந்து வெளிேயறும் யானைகள் பூச்சியூர் பகுதிக்குள் புகுந்து விளை நிலத்தை சேதப்படுத்துகின்றன. இதற்கு காரணம் காட்டு யானைகளுக்கு தேவையான தண்ணீர் குருடி மலையில் இல்லை. வனத்துறையினர் மலையில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு பதிலாக அகழிகள் மட்டுமே வெட்டுகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் பணம் வீணாகிறது. அகழி வெட்டுவதற்கு பதிலாக தண்ணீர் தொட்டி கட்டினால் காட்டு யானைகள் வெளியேறுவதை தவிர்க்கலாம்’, என்றனர்.

Leave a Response