கங்கை நதிக்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கங்கையில் புனித நீராட வரும் பக்தர்கள் நதிக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வதால் நதிக்கரை மட்டுமின்றி நதியும் பெரிய அளவில் மாசுபடுகிறது. அதன் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே கங்கை நதிக்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடைசெய்யக் கோரி டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி. மேத்தா மனுதாக்கல் செய்தார்.

 

இந்த மனு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கத்திகள், கப்புகள் போன்றவற்றை பயன்படுத்த தடைவிதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

இதுபோன்ற பொருட்களை இங்கு தயாரிப்பதும், விற்பனை செய்வதும் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கவும், இதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave a Response